இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் தொடரில், முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து 3-வது ஒருநாள் போட்டி கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அப்போது மழை குறிக்கிட்டதால், 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்து பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 20 பந்துகளில் அரைசதமடித்த அவர், 31 பந்துகளில் 9 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடித்து 86 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த போட்டியில் 14 வயதான சூர்யவன்ஷி 9 சிக்சர்கள் விளாசியதன் மூலம் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் மன்தீப் சிங் 8 சிக்சர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவரை முந்தி சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார்.
