2026 டி20 உலகக் கோப்பையின் 19வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் கொழும்புவின் பிரேமதசா கிரிக்கெட் திடலில் இன்று (பிப்.13) நடைபெறும் லீக் சுற்றின் 19-வது போட்டியில் ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் டிராவிஸ் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் பிரையன் பென்னட் – மருமாணி ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 35 ரன்களில் மருமணி அவுட் ஆக, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பிரையன் பென்னட் 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ரியான் பர்ல்(35), சிக்கந்தர் ராஸா(கேப்டன்) (25) ரன்கள் எடுத்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஜோஷ் இங்லிஸ்(8), டிராவிஸ் ஹெட் (கேப்டன்)(17), கேமரூன் கிரீன், டிம் டேவிட் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் – மேட் ரென்ஷா ஜோடி நிதான ஆட்டத்தை விளையாடினர். இருப்பினும் மேக்ஸ்வெல் (31), ரென்ஷா (65) ரன்களுக்கு அவுட்டாகினர்.
இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி, 146 ரன்கள் எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி வாகை சூடியது. ஆஸ்திரேலியாவின் இந்த தோல்வியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
