முதல் தரக் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 16,000 ரன்களைக் கடந்து, முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இந்திய அணி வீரர் விராட் கோலி முறியடித்துள்ளார்.
உள்நாட்டு அணிகளுக்கு இடையேயான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளன. 50 ஓவர்கள் வடிவில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் டெல்லியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் டெல்லி, ஆந்திரா அணிகள் மோதின. இதில் டெல்லி சார்பில் விராட் கோலி களமிறங்கினார். இது அவரின் 330-வது முதல் தரக் கிரிக்கெட் போட்டியாகும்.
இப்போட்டியில் அரைசதம் அடித்த கோலி, முதல் தரக் கிரிக்கெட்டில் 16,000 ரன்களை முறையே கடந்தார். இதில் 57 சதங்கள், 84 அரை சதங்கள் அடங்கும்.
இதன்மூலம் முதல் தரக் கிரிக்கெட்டில் 16,000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். ஏற்கெனவே முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 16,000 ரன்களை கடந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை கோலி தற்போது பிடித்துள்ளார்.
எனினும், சச்சின் 391 முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 16,000 ரன்களை கடந்தார். அவருடன் ஒப்பிடுகையில் கோலி 343 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

