பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பதிவை ரத்து செய்தது தொடர்பான உத்தரவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய தமிழக அரசு, திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆகஸ்ட் 10ஆம் தேதி செய்தி குறிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி குறிப்பை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என பத்திரிகை செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க எந்த அவகாசமும் வழங்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்மன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்து ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அரசு உத்தரவை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
