தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், ” அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுவை மாற்றி அமைக்கவும், பள்ளி மாணவர்களிடையே போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பெட்டியில் குழந்தைகள் தங்களின் புகார்களை போடலாம்.
அந்த கடிதங்கள் படிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 14417 என்ற இலவச எண் உள்ளது அதோடு 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை தொடர்பு கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. மார்ச் 26 ஆம் தேதி மாணவர்களின் உடல்நலம் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 7 லட்சத்து 25 ஆயிரத்து 432 ஆசிரியர் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். போக்சோ சட்டம் தொடர்பான வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டங்களில் உள்ள 11,820 அரசு பள்ளிகளில் அறிவுரை குழுமம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் மாற்றி அமைக்க 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிற மாவட்டங்களிலும் விரைவாக குழுவை அமைக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்