2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திமுக இன்று தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் அடிப்படையில் திமுகவும் அதிகபணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பீகாரை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் SIR பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நாளை (டிச.11) உடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை இன்று தொடங்கவுள்ளது. அதன்படி, தேனாம்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் பங்கேற்று பரப்புரையை தொடங்கி வைக்கவுள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்பட வைப்பதே என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி திட்டமாகும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதிசெய்வதுதான் இதன் முதன்மை இலக்கு. பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குத் தேர்தல் பணிகள், வாக்காளர்களைச் சந்திக்கும் முறைகள், வாக்காளர்களைச் சரிபார்த்தல், வாக்களிப்பு தினத்தில் செய்ய வேண்டியவை குறித்துப் பயிற்சி அளித்தல் ஆகியவை அடங்கும்.
இதற்காக, அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் தழுவிய தீவிரமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. இன்றுமுதல் ஜனவரி 10 வரை, பகுதி/ஒன்றியம்/நகரம்/பேரூர் கழக செயலாளர்கள் 68,463க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று 2026 சட்டமன்ற தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குசாவடியை வென்றால் தொகுதியை வெல்வோம் என குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் அதற்கான பணிகளில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
