முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது.
திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்க எங்களுக்கு மனம் இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுயவிவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? இது பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டும் செயல் அல்லவா?
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு,…
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 13, 2025
அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற எஃப்ஐஆரை லீக் செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு? எஃப்ஐஆர் அடிப்படையில் யார் அந்த சார்? என்ற நியாயத்தின் கேள்வியைக் கேட்டோம். அந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நீதி கிடைக்க சிபிஐ விசாரணை கோரினோம். ஆனால், அதனை முழுமையாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு எதிர்த்ததே ஏன்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறது திமுக?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு தானே? ஏன் சென்றது? நீதி கிடைப்பதில் என்ன பயம் இவர்களுக்கு? தெளிவாக சொல்கிறோம், எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு, இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு.
இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: “இது தாமதமாகக் கிடைத்த நீதியே…” அன்புமணி ராமதாஸ்!!
“ஞானசேகரன் திமுக கொத்தடிமை அல்ல, அனுதாபி மட்டுமே” என்று முதல்வர் ஸ்டாலின் போன்று நாங்கள் உருட்டவும் இல்லை. உங்களை போன்று எந்த சாரையும் காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை. திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். இது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் நிரூபிக்கப்படும். 2026-ல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார் என்ற கேள்விக்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும். அன்று திமுக தலைகுனிந்து நிற்கும், இது உறுதி.”