சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த 593 குடும்பங்களுக்கு, தமிழக அரசு இலவசமாக புதிய வீடுகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனகாபுத்தூரில் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஸ்டாலின் நகர் போன்ற பகுதிகளில் ஆற்றை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அடையாறு ஆற்றை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மறு குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில், ஒரு வீடு ரூ.17 லட்சம் மதிப்பில், அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு வழங்கப்படும். மேலும், புதிய இடத்திற்கு செல்லும் குடும்பங்களுக்கு ரூ. 5,000 இடமாற்றச் செலவுக்கான உதவித் தொகை, ஒரு வருடத்திற்கு மாதம் ரூ. 2,500 வீதம் ரூ. 30,000 வாழ்வாதாரத் திட்ட உதவி, மற்றும் ரூ. 2,500 மின்சார இணைப்பு கட்டணம் அரசால் வழங்கப்படும்.

அதே நேரத்தில், ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குடும்ப அட்டை மாற்றம், சமூக பாதுகாப்பு உதவிகள், பள்ளிச்சேர்க்கை, சமூக மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

மழைக்காலத்தில் வெள்ளம் போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கிலும், அடையாறு ஆற்றின் நீர்வழி சீரமைப்பிற்கும், ஆற்றங்கரையோர மக்கள் மறு குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஒத்துழைக்கும் குடியிருப்பாளர்கள் மாற்றுவிடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒப்புதல் தராத ஆக்கிரமிப்புகளை சட்டபூர்வமாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த சமூக நலத் திட்டத்திற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version