18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் கிட்டத்தட்ட நிறைவடையவுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில், 4-வது இடத்திற்கு எந்த அணி முன்னேறும் என்பதில் டெல்லி மற்றும் மும்பை இடையே போட்டி நிலவுகிறது. இன்று(21.05.2025) இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி ஃபிளே ஆஃப்க்கு முன்னேறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட மற்ற 5 அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் நிலையில் நேற்று(20.05.2025) ராஜஸ்தாஸ் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே 65-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் சென்னை பேட்டிங் செய்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் அடித்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல்லில், சுமார் 10 தோல்வியை சந்தித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது இடத்தை பிடித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜஸ்தான் அணியும் ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் கூட, இந்த தொடரில் இந்த அணியில் இடம் பெற்ற 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த லீக் சுற்றில் மட்டும் 33 பந்துகளில் 57 ரன்கள் குவிந்தார் வைபவ். ஒரு கோடியே 10லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனவர் இந்த வைபவ் சூர்யவன்ஷி.

ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் தான் வைபவ் சூரியவன்ஷியை ராஜஸ்தான் அணி பிளேயிங் லெவனில் சேர்த்தது. லக்னோ அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். குறிப்பாக ஆவேஷ் கான், சர்துல் தாக்கூர் போன்ற பவுலர்களுக்கு எதிராக சிக்சர்களை அடித்து அசத்தினார். இதனால் வைபவ் சூரியவன்சி ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆக மாறினார்.

இப்படி ஒவ்வொரு போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி நேற்று சென்னைக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு தோனியின் காலில் விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version