சென்னை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் கடற்கரையும், பரபரப்பான சாலைகளும் தான். ஆனால், தென் தமிழகத்து மக்கள் பலரின் சென்னை கனவு முதன்முதலில் காலடி எடுத்து வைத்த இடம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தான். வெறும் செங்கல், மணலை கொண்டு கட்டப்பட்ட ஒரு சாதாரணக் கட்டிடமாகவோ அல்லது வெறும் போக்குவரத்து மையமாகவோ இதனை நம்மால் கடந்து போய்விட முடியாது.

இது நூற்றாண்டு கடந்த சென்னையின் இதயம்; கோடிக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும், புன்னகைக்கும், பிரிவிற்கும், சேர்க்கைக்கும் சாட்சியாகத் திகழும் உணர்வுகளின் சங்கமம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எழும்பூர் ரயில் நிலையம் கடந்த 11ம் தேதியுடன் தனது 118-வது ஆண்டை நிறைவு செய்து, இன்றும் தன் கம்பீரம் குறையாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது.

பழைய மெட்ராஸ் மாகாணத்தின் தெற்குப் பகுதிப் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்காக, 1906-ஆம் ஆண்டு தொடங்கி 1908-ஆம் ஆண்டு ஜூன்  மாதம் 11ம் தேதி எழும்பூர் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின் (Henry Irwin) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம், ‘இந்தோ-சாராசெனிக்’ (Indo-Saracenic) கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கோதிக் மற்றும் முகலாயக் கட்டிடக் கலைகளின் அரிய கலவையாக, சிவப்பு நிற செங்கற்கள், குவிமாடங்கள், வளைவுகளுடன் லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களைப் போன்ற தோற்றத்துடன் இது உருவாக்கப்பட்டது. இதன் பிரம்மாண்ட தூண்களும், பழமை மாறாத முகப்பும் இன்றும் கடந்து செல்லும் எவரையும் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்க வைக்கும் அசுர அழகு கொண்டவை.

ஆரம்பக்காலத்தில் ‘மெட்ராஸ் மற்றும் தெற்கு ரயில்வே’ (MSMR) வசம் இருந்த எழும்பூர், பின்னர் ‘தென்னக ரயில்வேயின்’ மிக முக்கியமான முனையமாக மாறியது. ஆரம்பத்தில் நீராவி இன்ஜின்கள் கரும்புகையைக் கக்கிக் கொண்டு, கிராமத்து மனிதர்களை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்தன.

1931-ஆம் ஆண்டு சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான நாட்டின் முதல் மின்சார ரயில் சேவை எழும்பூர் வழியாகத் தொடங்கப்பட்டபோது, அது சென்னையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

 குறுகிய பாதை தண்டவாளங்கள் வழியாக ஓடிய புகழ்பெற்ற ‘நெல்லை எக்ஸ்பிரஸ்’, ‘பாண்டியன் எக்ஸ்பிரஸ்’, ‘மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்’ போன்ற ரயில்கள், பின்னர் அகலப் பாதையாக மாற்றப்பட்டு நவீனமடைந்த வரலாற்றை எழும்பூர் தன்னுள் புதைத்து வைத்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் என்பது தென் தமிழகத்து மக்களின் உணர்வுகளோடு பிணைக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து பிழைப்புத் தேடியும், கனவுகளோடும் சென்னைக்கு வரும் எத்தனையோ இளைஞர்களை ஒரு தாயைப் போல இன்முகத்துடன் வரவேற்ற இடம் இது. கல்லூரிப் படிப்புக்காக, வேலைக்காக சென்னைக்கு வந்துவிட்டு, பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களின் மகிழ்ச்சிப் பேரலைகளை இந்த எழும்பூர் நடைமேடைகள்  பலமுறை கண்டுள்ளன.

பிரியும் போது சிந்தும் கண்ணீருக்கும், மீண்டும் சந்திக்கும் போது மலரும் புன்னகைக்கும் இந்த 118 ஆண்டுகளில் எழும்பூர் கோடான கோடி முறை சாட்சியாய் இருந்திருக்கிறது.

பழைய மெட்ராஸ் மாகாணம் தொடங்கி இன்றைய நவீன சிங்கார சென்னை வரை, நாகரிகத்தின் அத்தனை மாற்றங்களையும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையம் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. தற்போது, பாரம்பரியம் மாறாமல் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ரயில் நிலையமாக மாற்றும் பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகளும் இங்கு அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

காலங்கள் மாறலாம், தலைமுறைகள் கடக்கலாம், தொழில்நுட்பங்கள் வளரலாம். ஆனால், 118 ஆண்டுகளைக் கடந்தும் சென்னையின் பெருமைமிகு அடையாளமாகவும், மக்களின் உணர்வுப் பாலமாகவும் திகழும் எழும்பூர் ரயில் நிலையத்தின் கம்பீரமும், அதன் மீதான மக்களின் காதலும் என்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version