தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு செயலாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்மறையான சில பக்கங்களை, அதிலுள்ள முக்கிய நகர்வுகளை, அதிமுக்கிய நடவடிக்கைகளை இந்த கட்டுரையில் காண்போம்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கும் தயாளு அம்மாள் அவர்களுக்கும் 1953 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அவர்களது 3-வது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றவர், விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார். 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றார். பின்னாட்களில் ஆகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் சில நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது பதின்ம பருவத்திலேயே திமுக தொண்டனாக மாணவர் இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து 1973-ல் பொதுக்குழுவில் தேர்வானது; 1976 எமர்ஜென்சி கால போராட்டம், மிசா கைது; 1982-ல் இளைஞரணியை உருவாக்கி திமுகவை இளைஞர் மத்தியில் கொண்டு சேர்த்து கட்சியை வலுப்படுத்தியது; 1989 தேர்தலில் எம்.எல்.ஏ-வாக முதல் வெற்றி; 1996-ல் சென்னை மாநகராட்சி மேயர்; 2003-ல் திமுகவின் பொது செயலாளர்; அமைச்சராக இருந்தவர் 2009-ல் துணை முதலமைச்சர் என அடுத்தடுத்த படிகளை தனது உழைப்பால் அரசியல் அனுபவம் கொண்டு கடந்து அடைந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவை அடுத்து திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயலாற்றினார். இது எதிர்கட்சிகளாலும் மறுக்க முடியாத உண்மை. அதையடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து தமிழ்நாட்டில் முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்று இன்று வரை செயலாற்றி வருகிறார்.
நிர்வாகத் திறன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு முக்கிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவரது தலைமையிலான அரசின் நிர்வாக திறனால் தொழில் வளர்ச்சி, மகளிர் நலன், மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சி, ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு, மீனவர் நலன், தொழிலாளர் நலன், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், இந்து சமய அறநிலையத்துறை திருப்பணிகள், சிறுபான்மையினர் நலன், விவசாயிகள் நலன் போன்ற பல்வேறு துறைகளிலும் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 2024-25 நிதியாண்டில் 11.19% GSDP வளர்ச்சியைப் பதிவு செய்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிச் செல்கிறது. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசு இதுவரை 65-க்கு மேலான விருதுகள் வழங்கி தமிழ்நாட்டை பாராட்டியுள்ளது. இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என பல்வேறு ஊடகங்களும், பத்திரிகைகளும், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, குடும்ப கடமைகளே வாழ்வு என கொண்ட மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக 1,30,69,000 மகளிர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்தியது; அதன் ஒரு முக்கிய நகர்வாக தடையில்லாமால் தொகையை பெற முன்னதாகவே ரூ.5000 வழங்கியது; உயர்கல்வி பயிலும் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தியது; உடன் மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தியது;
பள்ளி மாணவர்களின் நலனை நோக்கியிய காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றியாது (இத்திட்டம் இங்கிலாந்து, கனடா நாடுகளிலும் இந்தியாவில் ஒடிசா, பஞ்சாப், பாண்டிச்சேரி, கர்நாடகா முதலிய மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன); மாணவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை பெறச்செய்யும் வகையில் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது; மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பேருக்கு முதல்முறை மருத்துவச் சேவைகளும் 4.75 கோடி பேருக்கு தொடர் சேவைகளும் வழங்கி தொற்றா நோய்கள் பரவாமல் மக்கள் உயிர்களை காத்தது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றமடைய செய்துள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் முக்கிய சாதனைகள் ஆகும்.

சித்தாந்த போர்களை எதிர்கொள்வது: தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்வதற்கும், சில செயல்பாடுகளில் உலக நாடுகளும் நம்மை பின்பற்றும் வகையில் முன்னேறி இருப்பதற்கும் இங்கு ஆண்ட கட்சிகளின் முன்னெடுப்புகள் என்றால் அதற்கு ஆணிவேராக அமைந்திருப்பது அக்கட்சிகள் பின்பற்றிய ஒரே சித்தாந்தமான திராவிடம் தான். மக்களை சில தேவையற்ற பழமைவாதங்களிலிருந்து மீட்டு, பகுத்தறிவு பெற செய்தது இந்த திராவிட சித்தாந்தம் தான். ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட பின் தமிழர்கள் இத்துணை விரைவாக பகுத்தறிவு பெற்றதற்கும் குடற்கான சூழல் அமைந்ததற்கு காரணமானது இந்த திராவிட சித்தாந்தம் தான். அத்தகைய சித்தாந்தந்தை அழித்து தமிழகத்தை தன்வயப்படுத்த முயற்சிக்கும் ‘ஆரிய – சனாதன’ சித்தாந்தத்திற்கு எதிராக சமர் புரியும் திராவிட சித்தாந்தத்தை கொண்ட வீரனாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சொல்லப்போனால் திமுகவும் அதன் அணியும் தான் ஆரியத்திற்கு எதிரான போரை சரியாக, திடமாக எதிர்கொள்கிறது என்றால், அதற்கு முக்கியமாணவராக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் வரலாற்றை, தொன்மையை சிதைக்க செய்யப்படும் சூழ்ச்சிகளை முறியடித்து, அவற்றை உலகம் முழுக்க எடுத்து செல்லும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. கீழடி அகழ்வாய்வுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகள்; தமிழுக்கு எதிரான மத்திய சக்திகளின் சதி வேலைகள்; அச்சக்திகளின் ஆயுதமாக செயல்படும் ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றையெல்லாம் முறியடித்து தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பரியம், தொன்மை இவற்றை சிதைய விடாமல் பாதுகாக்கும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு செயல்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம், கொள்கை ரீதியாக எங்கும் சமரசம் செய்துகொள்ளாத முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திடகாத்திரமான முடிவே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே மத்திய அரசால் தமிழ்நாடு போதும், போதிய நிதியை ஒதுக்காத போதும் கூட அதையெல்லாம் சமாளித்து மக்களுக்கான திட்டங்கள் தடைபடாமல் போய் சேரும் வகையில் பார்த்துக்கொள்வதோடு, புதிய திட்டங்களையும் தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டுவது என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்துவது: திமுகவின் முன்னாள் தலைவரான மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பின் தலைமை பொறுப்பிற்கு வந்த மு.க.ஸ்டாலின் கட்சிக்குள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். குறிப்பாக அவர் பொறுப்புக்கு வந்த நேரத்தில் திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கவில்லை. அந்த சூழலில், கட்சியை உடைக்கும் முயற்சிகள் எடுபட்டிருக்கலாம். குறிப்பாக மு.க.அழகிரி போன்றோரை எல்லாம் சமாளித்து கட்சியை தன் தலைமையில் நிலைபெற செய்தார். அதன் மூலம் கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டது தெளிவாகிறது. அதுவும் “ஒரு சிறந்த எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டார்; அவரது தலைமையிலான திமுக ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக செயலாற்றியது” போன்ற பெயர்களை எடுத்திருக்க முடிந்திருக்கிறது என்றால் கட்சியை அவர் எப்படி வழிநடத்தியிருப்பார், வியூகங்களை வகுத்திருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி, தன்னை விட சீனியர்களை கையாளுதல் என்பது ஒரு தனி பிரச்சனை. ‘தம்பி நான் உன் அப்பாவோடு இருந்தவன்’ என தன்னை மட்டம் தட்டி அதிகாரம் செய்யும் அளவிற்கான முன்னோடிகள் இருந்தும் அவர்களை தன் பேச்சுக்கு நடக்க வைப்பது என்பது சிறந்த தலைமைக்கான ஒரு அடையாளம். அதை மு.க.ஸ்டாலின் அசாதாரணமாக செய்து வருகிறார். அதுபோக கட்சியில் பல்வேறு கட்ட நிர்வாகிகளிடையே நடக்கும் உள்ளடி அரசியலை களைந்து கட்சியை பலப்படுத்தி வருவதும்; தான் இருக்கும்போதே தனது மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தலைமையாக உருவாக்கி இருப்பதும்; அதே நேரத்தில் தனது இடத்தை கிஞ்சிற்றும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் முக்கியமாக நகர்வுகளாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பார்க்க வேண்டியுள்ளது. அதுபோக, விஜய் போன்ற ட்ரெண்டிங் அரசியல் செய்யும் புதிய கட்சி தலைவர்களுக்கு போட்டியாக காலத்திற்கேற்ற அரசியல் செய்து இப்போதிருக்கும் இளைய சமுதாயத்தின் மத்தியிலும் தலைமுறை கடந்த தலைவராக மிளிர்கிறார் மு.க.ஸ்டாலின் என்றால் அது மிகையாகாது.
கூட்டணி கட்சிகளை அரவணைப்பது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊரக, உள்ளாட்சி தேர்தல் தொடங்கி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்திலும் வெற்றி கிடைக்கிறது என்றால் அதற்கு கூட்டணி பலம் என்பது ஒரு முக்கியமான காரணி. அப்படிப்பட்ட கொள்கை கூட்டணியை வலுவாக கட்டமைத்து ஆறேழு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை வலிமை குறையாமல் கட்டிக்காப்பது என்பது சாதாரண விஷயமல்ல. தேர்தல் அரசியலில் பிரதிநிதித்துவங்களுக்காக தோழமை கட்சிகள் கோபித்துக்கொண்டு இருக்கையில் கொள்கை அரசியலை காட்டி சமாதானப்படுத்தி அக்கட்சிகளை தன்வயப்படுத்தி வைத்திருப்பதன் பின்னணியில் ஒரு ராஜதந்திரம் இருக்கத்தான் செய்கிறது.

கூட்டணி காட்சிகள் கொடுக்கும் குடைச்சல்களின் உட்சபட்சமானவற்றி தற்போதைய தேர்தல் காலகட்டத்தில் சந்தித்து வரும்போதும் கூட அவர்களிடத்தில் சண்டையிடாமல் சமாதானப்படுத்தி வருவதும், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் வரவேற்று அரவணைப்பதும் திமுகவை மேலும் பலப்படுத்தி வருகிறது எனும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த அசாமர்த்தியத்தை பாராட்டியே ஆக வேண்டும். அவருடைய இந்த திறன், தமிழ்நாட்டையும் கடந்து தேசிய அளவில் சென்றடைந்து இருப்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு. ‘இந்தியா கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும்’ என பல்வேறு மாநில கட்சி தலைவர்கள், ஏன் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே குரல்கள் எழும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைத்துவம் இருக்கிறது.
இந்த அளவிற்கு கட்சி அரசியலிலும் மேற்குறிப்பிட்டது போல ஆட்சிக்கட்டிலிலும் திறம்பட செயலாற்றி தமிழ்நாட்டை முன்னேற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.
