உதகை அருகே உள்ள லவ்டேல் பகுதியில் ஒற்றை காட்டு யானை சமீப தினங்களாக முகாமிட்டுள்ளது. தொட்டபெட்டா வனப்பகுதிகளில் உலாவி வந்த யானை பின்னர் வேல்வியூ பகுதிக்கு வந்து அதன் பின்னர் கேத்தி பகுதிகளுக்கு சென்று தற்பொழுது லவ்டேல் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது.
யானை ரயில்வே குடியிருப்பு பகுதி அருகில் உலாவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் யானையை வனபகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் இரவு நேரங்களில் குப்பை தொட்டிகளில் உள்ள உணவுகளை தேடி உண்ணும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உருவத்தில் பெரியதாகவும் பழக்கத்தில் குழந்தை போலவும் உள்ள யானை வனப்பகுதிகளில் கம்பீரமாக வாழக்கூடிய ஒரு விலங்கு. தற்பொழுது குப்பை தொட்டிகளில் உணவை தேடும் காட்சிகள் அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பினும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அதற்கான வாழ்வியலை உருவாக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.