தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கான இருக்கைகள் இன்று முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின்  ஆட்சி அமைய ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சி வரிசையிலேயே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று அனைவரும் பதவியேற்ற நிலையில், இன்று புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசிய முதல்வர் விஜய், ஜனநாயக மாண்புகளை வலியுறுத்தி உரையாற்றினார். “சட்டப்பேரவையில் அனைவரும் சமம். ஒரு கட்சியில் ஒரே ஒரு உறுப்பினர் இருந்தாலும், அவரது கருத்துக்கும் உரிய மதிப்பளிக்கப்படும்” என உறுதியளித்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி சிறு மற்றும் பெரிய கட்சிகளின் கருத்துக்கள் சமமாக எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் காக்கும் மிகப்பெரிய பொறுப்பு சபாநாயகருக்கு இருப்பதாகவும், சட்டமன்ற நடவடிக்கைகள் சீராகவும் செம்மையாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குவோம் என்றும் விஜய் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து உரையாற்றி வரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதல்வரின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். “இப்படி ஒரு முதலமைச்சரா என ஒட்டுமொத்த தமிழகமே வியந்து பார்க்கும் வகையில் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளன. தவெக ஒரு புதிய சக்தியாக, பெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது” என்றார்.

சாதி, மதம் எனப் பாராமல் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விஜயால் மட்டுமே முடியும் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளனர். “இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல; தமிழகத்தில் வீசும் விஜய் அலை, வெற்றி அலை, மற்றும் மக்களின் விசில் அலை” என உற்சாகமாகப் பேசி தனது நன்றியினைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து உரையாற்றி வரும் சபாநாயகர், “தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து, மக்கள் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம்” என்று அழைப்பு விடுத்தார், மேலும், தான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் சார்பின்றி நடுநிலையோடு அவையை வழிநடத்துவேன் என உறுதி அளித்தார். மேலும், அவையில் வெறும் கூச்சல் குழப்பங்களுக்கு இடமளிக்காமல், தரமான மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு அதிக ஊக்கமளிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பை நினைவூட்டிய சபாநாயகர், “சட்டமன்றம் என்பது மோதலுக்கான களம் அல்ல; மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தளம். அந்த நோக்கத்திற்காகவே மக்கள் நம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார். தனது உரையில் முதல்வர் விஜய்யின் அரசியல் எழுச்சியைக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் தற்போது முதல்வர் விஜய்யை மறைந்த மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆராகவே பார்க்கின்றனர் எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் எடுத்த எடுப்பிலேயே அரியாசனத்தில் அமர்ந்து முதல்வர் விஜய் சாதனை படைத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜேசிடி பிரபாகர், இது எதேச்சையாக நடந்ததல்ல என்றும், அவர் நீண்டகாலமாக மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று பணியாற்றியதற்குக் கிடைத்த வெற்றி என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version