திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் தனியரசை சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். முன்னதாக, நவம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசி இருந்தார் தனியரசு. இருப்பினும், திமுக கூட்டணியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அதனால் அங்கிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய தனியரசு இசைவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
வரும் 23ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான என் .டி.ஏ. பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில்தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டது. இதில் மீண்டும் வெற்றி பெற்று தனியரசு எம்.எல்.ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
