சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று தமிழகம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து இன்று காலை திமுக எம்.பி கனிமொழி அவர்கள் இடம் தொலைபேசியில் பேசினேன். இன்னும் இரு தினங்களில் திமுகவுடன் கூட்டணி குறித்த பேச உள்ளோம் என்றார்.
முதலமைச்சரே விசிலுக்கு வாக்களிப்பார் என்று தவெக தவைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, இதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், அடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தை திமுகவுடன் மேற்கொள்ள உள்ளோம் என்று கூறிய அவர், ஆட்சியில் பங்கு குறித்து பேசப்பட்டுள்ளதா என்று கேள்விக்கு, விரைவில் அதிகாரப்பூர்வமாக இது பற்றி பேசுவோம் என பதிலளித்தார்.
