மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், நான், மதுரை தெற்குசாவல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்ட தாரி ஆசிரியராக பணி புரிந்தேன். கடந்த 25.6.2024 அன்று பிளஸ் 1 வகுப்பிற்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவர், பாடத்தைக் கவனிக்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தார். இதை கண்டித்ததால், அந்த மாணவர், எதிர்த்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், மாணவரை காலணியால் அடித்தேன். இது குறித்து அந்த மாணவரின் பெற்றோர், என்மீது பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு, என்னை பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து நான், விருப்பு ஓய்வில் செல்ல விருப்பதாக மனு அளித்தேன்.
பிறகு அந்த மனுவை திரும்ப பெற்றுக் கொண்டு, வேறு ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விருப்ப பணியிட மாறுதலில் செல்வதற்காக, நான் பணிபுரிந்த பள்ளி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தேன். அதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டனர். எனவே, எனக்கு வேறு பள்ளிக்கு விருப்ப மாறுதலில் செல்ல உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட மாணவர், வகுப்பறையில் தவறு செய்துள்ளார். அந்த நேரத்தில் ஏற்பட்ட திடீர் கோபத்தால் ஆசிரியர், அந்த மாணவரை தாக்கி விட்டார். கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றும் மனுதாரர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். மனுதாரர் பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்விற்காக, மாணவர், அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பேரில் மாணவரின் பெற்றோர், மனுதாரர் மீது அளித்த புகாரைத் திரும்ப பெற்றுள்ளனர். பள்ளியில் கசப்பான நிகழ்வு ஏற்பட்டதால், அந்த பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விருப்பமில்லாததால், வேறு பள்ளிக்கு மனுதாரர் மாறுதல் கோரியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் தரப்பில், மனுதாரர், மாணவரை செருப்பால் அடித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. பள்ளியில் பாதுகாப்பு இல்லை என கூறி மாணவரின் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் சென்றனர். மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அவரது கோரிக்கையை ஏற்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், அனைவருக்கும் கல்வி இயக்கக சட்டமானது, மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என கூறியுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவரை, மனுதாரர் காலணியால் அடித்துள்ளார். அவரது விருப்ப இடமாறுதல் தொடர்பான மனு மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாணவரை, ஆசிரியர் காலணியால் அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம். அதேநேரம் இந்த வழக்கை சமமான கண்ணோட்டத்துடன் நீதிமன்றம் காண விரும்புகிறது. மனுதாரரின் வேலை ஆவண குறிப்பேட்டில் (சர்வீஸ் ரெக்கார்ட்) ஆசிரியருக்கு நல்ல பெயர் உள்ளது. மனுதாரர் தனது தவறை உணர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர், அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை, தற்போதுள்ள ஆவணங்களில் அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும். அதுவரை அவர் மீதான பணியிடை நீக்கம் தொடரலாம். அதைத் தொடர்ந்து மனுதாரர் வேறு பள்ளிக்கு விருப்ப மாறுதலில் செல்ல அனுமதிக்கலாம். நிகழாண்டு பள்ளிகள் விரைவில் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன. எனவே மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கை, வேறு பள்ளிக்கான விருப்ப மாறுதலை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.