தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி மாதத்தின் 18-ம் நாள் கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து காவிரி ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வரும். அதனை போற்றி வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் விழாவே ஆற்றுப்பெருக்கு எனக் கூறப்படுகிறது. இந்த நன்னாளில் பெண்கள் ஆற்றில் புனித நீராடி, கரையோரம் சுத்தம் செய்து, அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவர்.
அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் ஆற்றங்கரையோரங்களிலும் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களிலும் வழிபாடு நத்தி வருகின்றனர். குறிப்பாக திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த ஆடிப்பெருக்கு நாளை கோலாகலமாக கொண்டாடுவர். காவிரி, கொள்ளிடம் போன்றவை திருச்சியில் பாய்வதால், படித்துறைகளில் இன்று முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதும். அதேப் போல, காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களான பவானி கூடுதுறை, மேட்டூர் அணை, பரமத்தி, குளித்தலை, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் போன்ற இடங்களில் ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.