சென்னையில் கிஸ்கிந்தா, குயின்ஸ் லாண்ட், விஜிபி, எம்.ஜி.எம் என பல தீம் பார்க்குகள் உள்ளன. அவைகளில் முதன்மையானது விஜிபி தீம் பார்க். விஜிபி குழுமத்திலிருந்து உருவாக்கப்பட்ட இந்த தீம் பார்க் சென்னையில் மிகவும் பிரபலம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்வதற்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளது. கோடை விடுமுறை என்பதால் இங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.
அதேப் போல் நேற்றும் (27.05.2025) இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் பொழுதுபோக்கு ரைடுகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். இங்குள்ள ராட்சத ராட்டினத்தில் கிட்டத்தட்ட 36 பேர் விளையாடிக் கொண்டிருந்த போது, ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது. 120 அடி உயரத்தில் நின்ற நிலையில் ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் அலறினர்.
அத்தோடு அவர்களது குடும்பத்தினரும் கீழே இருந்தவாறு கூச்சலிட ஆரம்பித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்டினத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக ராட்டினத்தில் சிக்கியவர்கள் மற்றும் கீழே இருந்த உறவினர்கள் தீம் பார்க் குறித்தும், நிறுவனத்தினர் குறித்தும் தாறுமாறாக குற்றம்சாட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தீம் பார்க்கை தற்காலிகமாக மூடுமாறு நிர்வாகத்திற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு தனியார் பொழுதுபோக்கு மைய பொது மேலாளருக்கு நீலாங்கரை போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விளக்கமளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று (28.05.2025) தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்பாக தாம்பரத்தில் உள்ள கிஸ்கிந்தா தீம் பார்க்கிலும் இதேப் போல் ராட்டினத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பின்பு பராமரிப்பு காரணமாக சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக கிஸ்கிந்தா தீம் பார்க் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.