காரைக்குடி பிரச்சாரத்திற்காக சென்றபோது மதுரை அருகே தவெக தலைவர் விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநிலம் தழுவிய தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, திருச்சி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் அவரது வாகனத்தை உற்சாகத்துடன் பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் இருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.
இன்றைய காரைக்குடி பரப்புரைக்காகக் காவல்துறை சார்பில் 37 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கண்ணதாசன் மணிமண்டபம் மற்றும் தேவர் சிலை அருகிலுள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். “யாரும் தலைவரின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது” எனத் தவெக தலைமை ஏற்கனவே கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையிலும், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, தொண்டர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி அமைதி காக்குமாறு காவல்துறையினரும் கட்சி நிர்வாகிகளும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
