புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் எல்.ஜே.கே தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களை கைப்பற்றியது.

திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, சுயேட்சை 3 இடங்களையும் வென்றது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் அமைச்சராக ரங்கசாமி கடந்த 13ம் தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சட்டப்பேரவை தலைவராக அதிமுக எம்.எல்.ஏ அன்பழகனை கூட்டணி தலைமை முடிவு செய்துள்ளது.

 இதையடுத்து இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், அன்பழகனுக்கு தற்காலிக சபாநாயகராகப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் லாஸ்பேட்டை  தொகுதி என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பி. சிவக்கொழுந்து  மற்றும் என் ஆர் காங்கிரஸ், பாஜக, திமுக, லட்சிய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் தனது நாற்காலியில் அமர்ந்து பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உப்பளம் தொகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version