சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்யும் வகையில் எதிர்காலத்தில் மின்சார ஏர் டாக்சி சேவையை இயக்கலாம் என கும்டா பரிந்துரை செய்துள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA அல்லது கும்டா), சென்னையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தேவையான பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்த தனது ஆய்வு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது.
அதில் 2023-ஆம் ஆண்டு முதல் 2048-ஆம் ஆண்டு வரையில், சென்னையில் பொது போக்குவரத்தான பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், விரைவு ரயில், புதிய வழித்தடங்கள், சாலை வசதி, சாலை அமைப்பு, பார்க்கிங் வசதிகள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சார பேருந்துகளுக்கும், மின்சார வாகனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, மின்சார படகு சேவையான ‘வாட்டர் மெட்ரோ’ மற்றும் மின்சார விமான சேவையையும் அமல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், சென்னை ஐஐடி-யில் இ-பிளேன் (ஏர் டாக்சி) தயாரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனை 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த ஐஐடியின் இ-பிளேன் குழுவினர் திட்டம் வகுத்து வருகின்றனர். இதற்காக சென்னையில் கட்டப்படும் உயரமான கட்டடங்களில் இறங்குத் தளம் அமைக்க வேண்டும் எனவும் சென்னை ஐஐடியின் இபிளேன் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வழங்கி உள்ள திட்ட அறிக்கையில், ஏர் டாக்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மின்சாரத்தை பயன்படுத்தி செங்குத்தாக மேலே எழும்பும் வகையிலும், செங்குத்து நிலையில் கீழே இறங்கும் தொழில்நுட்பத்தைப் (eVTOL) பயன்படுத்தும் ஏர் டாக்சிகள், நகர்ப்புற இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நகரம் முழுவதும் விரைவான, நேரடியான வழிகளில் பயணிக்க முடியும். இந்த ஏர் டாக்சிகள் நகர்ப்புற பயணிகளுக்கான பயண நேரத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது. குறைந்தபட்ச சத்தம் மற்றும் கார்பன் உமிழ்வற்ற எதிர்கால போக்குவரத்து தீர்வாக இது பார்க்கப்படுகிறது.
