கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சுதர்சனம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். கூடுதல் ஆணையரும், முன்னாள் டிஜிபி-யுமான எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வழக்கில் துப்பு துலக்கிய தனிப்படை போலீசார் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை கைது செய்தது. குற்றவாளிகள் 2 பேர் வடமாநிலத்திலேயே என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான ஓமர் என்ற ஓம் பிரகாஷ் உள்பட 9 பேரை தனிப்படை கைது செய்தது. ஜாமினில் வெளியே வந்த 3 பெண்கள் தலைமறைவாகினர். ஓம் பிரகாஷ் உள்பட 2 பேர் சிறையிலேயே மரணமடைந்தனர். எஞ்சிய ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், தண்டனை விவரங்களை வரும் 24ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஜெயில்தார் சிங் குறித்த தீர்ப்பும் அன்றைய தினம் கூறப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version