தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை திரட்ட வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அமித்ஷா நேற்று நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்பு, மாநில நிர்வாகிகளுடன் மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், முரளிதர் மோகல், அர்ஜுன் ராம் மெகவால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை திரட்ட வேண்டும்.
பல சமுதாயங்களுக்கு பாஜக செய்துள்ள திட்டங்கள் கவுரவங்கள் தொடர்பாக எடுத்துரைத்து அவர்களை கூட்டணிக்கு ஆதரவு தர அழைக்க வேண்டும். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் நாம் கூடுதல் தொகுதியில் நிற்பதால் அதிக கவனம் செலுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
