பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதிரடியான உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது.

பாமகவில் நிலவி வரும் மோதல் போக்கு எப்போது முடியும் என்று அக்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான அதிகார மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக ராமதாஸ் அவர்களின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு இளைஞரணியில் முக்கிய பொறுப்பு கொடுத்தது மோதலின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பொது மேடையிலேயே அன்புமணி தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

இரு தலைவர்களும் தங்கள் ஆதரவு நிர்வாகிகளை நியமிப்பது, மற்றவர்களை நீக்குவது என நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் அன்புமணி மீது காட்டமான விமர்சனங்களை ராமதாஸ் முன்வைத்து வருகிறார். ஆனால் மறுபுறம் ராமதாஸ் அவர்கள் தான் தன்னுடைய வழிகாட்டி. அவருடைய லட்சியத்தை, கனவை நிறைவேற்றுவேன் என்று அன்புமணி கூறி வருகிறார். தற்போதைய சூழலில் பாமகவின் இரண்டு தலைவர்களின் கீழ் நிர்வாகிகள், தொண்டர்கள் பிரிந்து நிற்கின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு அரசியல் தலைவர்களும், கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியிருக்கையில், கட்சியின் மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கே ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு அனுப்பிவைத்து இருந்தது. இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

அதாவது, பாமக தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன் காரணமாக பாமக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவை அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு சொந்தமானது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இது ராமதாஸ் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தது.

இதனிடையே, பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று மறு சீராய்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போதைய சூழலில் நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தக்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version