தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சூரியனார்கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 16 அன்று இந்தக் கட்டிடத்தைத் திறந்துவைத்த நிலையில், திறப்பு விழாவுக்கு முதல் நாளே இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து அவசர அவசரமாகப் பழுதுபார்க்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் அண்ணாமலை தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“முதலமைச்சர் திறப்பு விழாவிற்குப் பிறகு, தற்போது, மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்” என்று அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, நான்கு நாட்களுக்கு முன்பாக, கடந்த 16ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் திறந்து… pic.twitter.com/htr5dLQQWI
— K.Annamalai (@annamalai_k) June 20, 2025
அதிர்ஷ்டவசமாக, மேற்கூரை இடிந்து விழுந்தபோது அந்த அறையில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், ஆனால் “எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், இனி எப்படி ஊழியர்கள் அங்கிருந்து பணியாற்ற முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக, “உடனடியாக, தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு, அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்படும் கட்டிடங்களின் தரக்கட்டுப்பாடு குறித்துப் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.