கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒப்புதல் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கான முன்மொழிவுகள் கடந்த 2025 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. நவம்பரில் நடைபெற்ற இந்திய தொல்லியல்துறை தலைவா் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் 8 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், “தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரைதான். இதை தவறவிட்டால் பருவ மழையால் களப்பணிகள் தடைபடும். முக்கிய ஆராய்ச்சிகளும் தாமதமாகும். 2025-2026- ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும்.
தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்கு பெருமை சோ்ப்பது. எனவே, அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் கோரிக்கையை ஏற்று, மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய 8 இடங்களையும் சேர்த்து 13 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, மத்திய பாஜக அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
