வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் முன்பதிவுகள் அதிரடியாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவிலும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது ஏற்கனவே லாக்டவுன் பயத்தில் இருந்த மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்ய முயற்சிக்கும்போது, விநியோக மையங்களின் எண்கள் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது அழைப்புகளை ஏற்க மறுப்பதாகவோ பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல இடங்களில் இணையதள முன்பதிவு வசதிகளும் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
