தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக சதி செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபிக்கு புகார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு மும்முனைப் போட்டியைச் சந்தித்து முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வையும் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் மீது திரும்பியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது. இத்தகைய இழுபறி நிலையால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வரும் சூழலில், நாளை நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகள் வெளியாவதில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது தேவையற்ற இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக அதிரடிப் புகாரை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும்  டிஜிபியிடம் மனு அளித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் பின்னணியில் உள்ள சில அமைப்புகள் வாக்கு எண்ணும் மையங்களில் திட்டமிட்டு ரகளையில் ஈடுபடக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். தங்களுக்குக் கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின் அடிப்படையில், இந்த இடையூறுகள் வாக்குச் சாவடிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் முக்கியக் கட்சி அலுவலகங்கள் அருகிலும் நிகழக்கூடும் என அவர் அஞ்சுவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் போது சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும், ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் முடிவுகள் அறிவிக்கப்படுவதை உறுதி செய்யவும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திமுக கோரியுள்ளது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீஸாரைக் குவிப்பதோடு, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளை (மே 4) தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version