கோவை கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை ஒன்று நடந்து செல்லும் காட்சி வீடியோவாகப் பதிவாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் இயல்பாகவே அதிகம். இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர் கதையாக உள்ள நிலையில், தற்போது சிறுத்தை மற்றும் அரிதான கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிறுத்தை ஒன்று புகுந்து, ஆடு மற்றும் கோழிகளை வேட்டையாடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. கால்நடைகள் வேட்டையாடப்பட்டதாலே விவசாயிகள் மற்றும் குடியிருப்புகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருந்து வரும் நிலையில், தற்போது கருஞ்சிறுத்தை நேரில் தென்பட்டிருப்பது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், கணுவாய் பகுதியில் உள்ள மலைத்தொடரில் கருஞ்சிறுத்தை ஒன்று கம்பீரமாக நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் தங்கள் கைப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் வெளியே வர மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, கருஞ்சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்கவும், வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வராமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
