தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமை குறித்து குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தமிழ்நாட்டில் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து தேவையை இவை பூர்த்தி செய்து வருகின்றன.
அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் கடைசியாக 2018 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த எட்டு ஆண்டுகளாக டீசல், உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கணிசமாக அதிகரித்த போதிலும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையில், தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், போக்குவரத்துத் துறை ரூ.72,667 கோடி நட்டத்தில் இயங்கி வருவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். மேலும், அரசுப் பேருந்துகளை ஒரு கிலோமீட்டர் இயக்க ரூ.70.61 செலவாகும் நிலையில், பயணச்சீட்டு வருவாய் மூலம் ரூ.25.97 மட்டுமே கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவின. குறிப்பாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கட்டண நிர்ணய முறைகள் தொடர்பாக முன்பு ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருந்தன என்பதும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.
ஆனால், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக தற்போது வரை எந்தவித கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து அரசின் பரிசீலனையில் எந்த அறிவிப்பும் இல்லை என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
