புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில், இருவரும் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், மாவட்டச் செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்தனர்.
புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ற முறையிலும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி பெற்ற நேரத்தில் பிரச்சாரத்தை தொடங்கவுமில்லை, முடிக்கவுமில்லை என்ற அடிப்படையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் இருவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோர உள்ளனர். இந்த மனுக்களை இருவர் தரப்பிலும், அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்கின்றனர். நாளையும், நாளை மறுநாளும் நீதிமன்றம் விடுமுறை என்பதால் இந்த மனுக்கல் வெள்ளிக்கிழமை விசாரணை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.