ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், பொருளாதார குற்றப் பிரிவுக்கு எதிராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம், 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் இந்த மோசடியில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, ஆர்.கே.சுரேஷின் எட்டு வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டனர்.
வங்கிக் கணக்குகள் முடக்கத்தை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வழக்கு எண்ணின் பெயரில் 8 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், வங்கிக் கணக்குகள் முடக்கத்தை நீக்கும்படி, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, 8 லட்சம் ரூபாய் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் டிபாசிட் செய்யப்பட்டது. இருப்பினும், வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த மனு, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வங்கிக் கணக்குகள் முடக்கம் மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நீக்கப்பட்டு விட்டதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான காலக்கெடுவுக்குள் வங்கிக் கணக்கு முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நடிகர் ஆர்.கே.சுரேஷின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.