டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றமும் அடக்கம். இதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டர். 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பணியிட மாற்றம், பார் உரிமம், மதுபானங்களின் விலையை 10 ரூபாய் கூடுதலாக விற்பது, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் அதிகம் கொள்முதல் செய்வது போன்றவற்றால் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியது.
டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரியும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்றும் டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதன்பிறகு டாஸ்மாக் நிறுவனத்தின் பொதுமேலாளர் சங்கீதா, துணைப் பொதுமேலாளர் ஜோதிசங்கர் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களாக மொத்தம் 7 முறை, அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மண்டல பொறுப்பாளர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த 5 பேர் கொடுத்த தகவல்களின் பேரில், நேற்று (16/5/2025) டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை (17/5/2025) மீண்டும் விசாகனிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதனிடையே டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனுக்கு, எந்தெந்த மதுபான நிறுவனங்களிடம் இருந்து எந்தெந்த ரக மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தீஷ் என்பவர் உத்தரவுகள் பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஜீப்ரா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரத்தீஷின் வீட்டிற்கு சென்றனர். வீடு திறந்திருந்த நிலையில் அவர் காணப்படவில்லை. நாள் முழுவதும் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வீட்டில் சோதனை நடத்திவிட்டு வீட்டைப் பூட்டி அதன் சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் தகவலறிந்து ரத்தீஷ் தலைமறைவாகி விட்டதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஏனெனில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த ரத்தீஷ் என்பது அவர்களின் புகாராகும்.
ஒருபக்கம் விசாகனிடம் விசாரணை, மறுபக்கம் தலைமறைவான ரத்தீசை தேடும் பணி என்று அமலாக்கத்துறை பரபரப்புடன் காணப்படுகிறது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்ற விவகாரம் தமிழக அரசியல் களத்தில் அனலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.