த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த 21-ம் தேதி விஜய்யின் தவெக கட்சி சார்பில் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 2,500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இந்த மாநாட்டில்
பங்கேற்றனர். அத்தோடு மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் விஜய் பவுன்சர்கள் புடைசூழ நடந்து வந்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் கட்சியின் துண்டை அவர் நோக்கி வீச, அதனை அணிந்து கொண்டார்.
அப்போது தடையை மீறி சிலர் விஜய்யை நெருங்க முயன்ற போது, அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை குண்டுகட்டாக மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அவ்வாறு தூக்கி எறியப்பட்ட நபர் ஒருவர் உடனடியாக எழ முடியாமல், தரையில் புரண்டு தவித்தார். அதேப் போல மற்றொரு நபரை பவுன்சர்கள் தூக்கி வீசும் போது, அவர் அங்கிருந்த மேடையின் கம்பியை பற்றிக் கொண்டார். ஒருவேளை அங்கிருந்து அவர் கீழே விழுந்திருந்தால் அவரது கை, கால்கள் உடைந்திருக்க வாய்ப்புண்டு எனக் கூறப்பட்டது.
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”மதுரை தவெக மாநாட்டில் ரேம்ப் மீது ஏற முயன்ற தன்னை பவுன்சர்கள் குண்டுகட்டாக வெளியேற்றியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் தவெக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.