சென்னையில் கடந்த சிலநாட்களாக காகங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் நிலையில், இறந்த பறவைகளை கையால் தொடக்கூடாது என்றும் ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை அடையாறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, காகங்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.
அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் H5.N1 வகை வைரஸ் கண்டறியப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆராய்ச்சி நிறுவனம் காய்ச்சல் எர்ச்சரிக்கை குறித்து தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதனடிப்படையில், இறந்த காகங்களை கையால் தொட வேண்டாம் என்றும் இறந்த காகங்களை 8 முதல் 10 அடி வரை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் அல்லது எரிக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பறவைக்காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
