வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உட்பட 9 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 30ம் தேதி உருவான காற்றழுத்தப்பகுதி ஒன்றாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று இன்று தெற்கு ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் முன்னெச்சரிக்கையாக சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் என 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவி வரும் அசாதாரண சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறும் அதிகாரிகள் மீனவர்கள் கடலூக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.