சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. பொது மக்கள் பயன்பாட்டுக்கு லாரிகள் வழியாகவும், வீடுகளுக்கு குழாய் வழியாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து அமைத்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என்று 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஏடிஎம்களை பொறுத்த வரையில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டிகளில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 250லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் டாங்குகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஏடிஎம்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த எம்டிஎம்களை தொடர்ந்து கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, தயாநிதி மாறன் எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version