அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன் வைத்தார்.

அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அரசாணையின் படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார்.

நாளை பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும் போது 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தார்.

இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உறுதி அளித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version