வாக்காளர் அதிகார் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் புறப்பட்டு சென்றார்.
பீகாரில் சமீபத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த செயலை எதிர்த்து, வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
கடந்த 17-ம் தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை, 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வரும் 1-ம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரை 1,300 கிலோ மீட்டர் வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில், பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் கனிமொழி எம்.பி-யுடன் சேர்ந்து புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்று ராகுல்காந்தி பேரணியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார் முதலமைச்சர். இதனை முடித்துக் கொண்டு மதியம் 2மணியளவில் மீண்டும் சிறப்பு விமானம் மூலம் மாலை சென்னை திரும்பவுள்ளார்.