கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி வாகை சூடும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம். இந்த முறை கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக தோல்வியை சந்திக்காத அளவுக்கு களப்பணி இருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஒன் டூ ஒன் சந்தித்து கருத்துக்களை கேட்டு அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் (17.06.2025) கோவை மாவட்டத்தில் பரமத்திவேலூர், பரமக்குடி, கவுண்டம்பாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அப்போது நிர்வாகிகளிடம் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது. மாவட்ட செயலாளர்கள்,பொறுப்பு அமைச்சர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது என்று முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார். அதேபோல் திமுக அரசின் சாதனைகள் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது என்ற கள நிலவரத்தையும் கேட்டறிந்த முதலமைச்சர் மு க.ஸ்டாலின் இன்னும் தேர்தலுக்கு 10 மாதம் தான் இருக்கிறது என்பதால் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்டம் கவுண்டபாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து பேசும்போது இந்த முறை கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி வாகை சூடும் வகையில் களப்பணியை மேற்கொள்வோம் என்றும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக தோல்வியை சந்திக்காது என்றும் கூறியுள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்தித்து இருந்த நிலையில் முதலமைச்சரை சந்தித்த கோவையை சேர்ந்த நிர்வாகிகள் இவ்வாறு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.