திருச்சியில் நடைபெற்ற புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் இனி நம் திராவிட மாடல் அரசு பயணிக்கப் போவது சிங்கப்பாதை என்று கூறியது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 408 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9/5/2025) திறந்து வைத்தார். மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவையும் அவர் வழங்கினார். இதுமட்டுமல்லாது 464 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுபெற்ற பல்வேறு திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். கூடவே, 830 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை நினைவுகூர்ந்தார். அந்த மாநாட்டில் 10 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அறிவித்ததையும், 7 வாக்குறுதிகள் தந்ததையும் சுட்டிக்காட்டினார். அmவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை குறிப்பாக வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு, கல்வி, குடிநீர் போன்றவற்றை நிறைவேற்றி உள்ளதாக கூறினார். பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை 9.69 விழுக்காடு வளர்ச்சியை தம் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் தமிழ்நாடு பார்த்திடாத வளர்ச்சி இது என அவர் குறிப்பிட்டார்.
வேறெந்த மாநிலத்தை விடவும் உயர்கல்வியில் தமிழ்நாடு புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்களால் முன்னேற்றப்பாதையில் நடைபோடுவதாக முதலமைச்சர் கூறினார். குறிப்பாக உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட இருமடங்க அதிகரித்து உள்ளதாகவும், நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5-ல் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்துள்ளது, வருகைப்பதிவேட்டில் மாணவர்களின் வருகை சரசாரி அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இதனைக் காட்டிலும் எல்லோருக்குமான அரசாக, சமூக நீதியை காப்பாற்றும் அரசாக திமுகவின் திராவிட மாடல் அரசு உள்ளதாக அவர் கூறினார். திமுகவின் இந்த சாதனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அரசியல் எதிரிகள் புலம்பி வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்த போது முந்தைய அதிமுக அரசின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஆதரவு தெரிவித்தார், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்த ஒரே காரணத்தால் தான் அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் போன்ற அவலங்கள் அதிமுக ஆட்சியில் இருந்ததாகவும், இருண்ட காலத்தில் இருந்த தமிழ்நாட்டை கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதைக்கு திமுக திருப்பி உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இது வெறும் தொடக்கம் தான் என்றும், திராவிட மாடல் அரசின் 2.0 லோடிங் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் இனி நாம் செல்லப்போவது சிங்கப்பாதையாக இருக்கும் என்றும் எதிர்வரும் ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.