சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் முதலமைச்சர் இன்று மாலை வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி வழக்கம் போல் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், உடனே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இருந்தபடியே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார்.
முதலமைச்சருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதால், ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில், அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், பூரண குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து 7வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
