நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சிக்கு பயணப்படுகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 10-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் விஜய். இந்த தேர்தலில் விஜய் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி அடைந்தார். ஒருவர் ஒரு தொகுதி எம்.எல்.ஏ-வாக மட்டுமே செயல்பட முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்.

இதற்காக மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்லும் முதலமைச்சர், பிரத்யேக வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இதற்காக பிரத்யேக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலின் முகப்பு பகுதியில் தனது வாகனத்தில் நின்றபடியே பேசுகிறார்.

முதலமைச்சர் பேசவுள்ள இடம் மற்றும் அவர் வருவதற்கான வழி என மொத்தம் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்கிடையே த.வெ.க. தலைமை நிலையம் சார்பில் அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5 ஆயி ரம் பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், சிறுவர்-சிறுமியர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொள்ள வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version