தமிழக அரசியல் வரலாற்றில் 51 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய், மிக குறைந்த வயதில் மாநிலத்தின் உயரிய பொறுப்பை ஏற்றவர்கள் வரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார். சினிமாத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அவர், தற்போதைய தலைமுறையின் செல்வாக்கு மிக்க இளம் தலைவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மிக குறைந்த வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர்கள் பட்டியலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார். அவர் 1991-ம் ஆண்டு தனது 43-வது வயதில் முதன்முதலாகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து கருணாநிதி (44 வயது) இரண்டாம் இடத்திலும், ஓ. பன்னீர்செல்வம் (50 வயது) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பெருந்தலைவர் காமராஜர் தனது 51-வது வயதில் முதலமைச்சரான நிலையில், தற்போது அதே 51 வயதில் முதலமைச்சராகி அவரோடு 4 மற்றும் 5-வது இடங்களைப் பகிர்ந்துகொள்கிறார் விஜய்.

இந்த வரிசையில் அதிக வயதில் (68 வயது) முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் என்ற இடத்தைப் கடந்த 2021-ல் ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் பெற்றுள்ளார். இதேபோல், அண்ணாதுரை – 57 வயது, எம்.ஜி.ஆர். – 60 வயது,  எடப்பாடி பழனிசாமி – 62 வயதில் முதலமைச்சராக பதவியேற்றனர். அனுபவம் வாய்ந்த தலைவர்கள் நிறைந்த இந்த வரிசையில், ஒரு இளம் முதலமைச்சராக விஜய்யின் வருகை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version