தமது பெயரில் உள்ள மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்குமாறு புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது.

சென்னை பாடியநல்லூரை சேர்ந்தவர் மிளகாய்ப்பொடி வெங்கடேஷ் என்ற கே.வெங்கடேஷ். இவர் மீது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,தமது தாயார் பதினைந்து ஆண்டுகள் மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்து வந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், சிறையில் தம்மை மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியுடன் சிறை அதிகாரிகள் அழைப்பதாகவும்,இதனால் தாம் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மிளகாய்ப்பொடியை தூவி கொலை செய்வீர்களா? என தம்மிடம் கேட்பதாகவும் இதனால் சமூகத்தில் தமக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இதனால், ஆவணங்களில் இருந்து மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்கக்கோரி புழல் சிறை நிர்வாகம்,டிஜிபி உள்ளிட்டோருக்கு மனு அளித்ததாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

எனவே, தனது அடைமொழியை நீக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கை தனி நீதிபதி தான் விசாரிக்க முடியும் எனக்கூறினார். இதனையடுத்து,இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version