மங்களதேவி கண்ணகி டிரஸ்ட்டின் செயலர் ராஜகணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட தன்னார்வல தொண்டு நிறுவனம். கடந்த 26 ஆண்டுகளாக மங்களதேவி கண்ணகி கோவிலின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கார்த்திகேயன் என்பவர் சட்ட விரோதமாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவதாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோதமாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் அன்னதானம் வழங்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இதற்காக விண்ணப்பித்த எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சட்டவிரோதமாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில் அதனை காரணம் காண்பித்து எங்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே அன்னதானம் வழங்க அனுமதி மறுத்து தேனி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் ” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, “வழக்கு தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.