சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின், குழந்தைகளின் கல்வி செலவை திமுக ஏற்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேப் போல வரும் 25-ம் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் க்டல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் எனக் கூறப்படுகிறது.
தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை வரலட்சுமி என்ற 30 வயது தூய்மை பணியாளர், வழக்கம் போல காலை கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தப் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்த வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இத்தகவல் பரவிய நிலையில், மின்சார வாரியம் சார்பில் ரூ.10லட்சமும், தனியார் நிதி நிறுவனம் சார்பில் ரூ.10லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார்.
அத்தோடு மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமி கணவருக்கு மாநகராட்சியில் வேலை வழங்கப்படும் என்றும், அவர்களின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.