சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார்.
வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
அகராதி, அரசியல், இலக்கியம், கல்வியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், உடற்செயலியல், உயிரியல், வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம், பன்னாட்டு பொருளாதாரம், வணிகவியல், தமிழக, இந்திய, உலக வரலாறு, இங்கிலாந்து – ஐரோப்பிய வரலாறு, நிலவியல், மனையியல், சமூகவியல், உளவியல், வானியல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உயர்கல்வி நூல்கள், கீழடி நூல்கள், செவ்வியல் நூல்கள், சிறார் நூல்கள், கதை, கவிதை என பல்வகை நூல்களும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமின்றி, மொழிபெயர்க்கப்பட்ட உலக மொழி புத்தகங்கள் என சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலாளர், பாடநூல் கழக தலைவர், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்