காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அத்துடன், அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க தனது வாழ்த்துகளையும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
