திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வு ரத்து, ஆண்டுக்கு 6% வரி உயர்வை கைவிடுதல், அபராத வரி விதிப்பதைத் தடுத்தல், சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைத்து மனித உயிர்களை காத்தல், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமார் 200 பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கும் கோவை மாநகராட்சிக்கும் எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நான்கு ஆண்டுகால மௌனமும் தற்போதைய போராட்டமும்:
திமுக கூட்டணியில் இருந்த கடந்த நான்கு ஆண்டுகளாக, திமுக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென நடைபெற்றுள்ள இந்த முற்றுகைப் போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது உண்மையிலேயே மக்களின் நலனுக்காக நடத்தப்படும் போராட்டமா அல்லது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை மிரட்டும் ஒரு உத்தியா என்ற விவாதம் எழுந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்டுகளுக்கு “சுயநினைவு திரும்பியதாக” பொதுமக்கள் கேலி செய்து வருகின்றனர்.
இந்த போராட்டம் அரசியல் அரங்கில் மேலும் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.